Saturday 13 September 2014

புங்குடுதீவு கல்விப்பாரம்பரியத்தின் முதுபெரும் சொத்து

எழுதியவர் - பேராசிரியர் கா குகபாலன், யாழ் பல்கலைக்கழகம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக்கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டு பாய்க்கப்பலின் உருவத்தைப் போன்ற நிலத்தோற்றத்தினைக் கொண்டு உள்ள தீவாகும். இத்தீவு வாழ்மக்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தொடர்பினைப் பேணிவந்துள்ளதை பல்துறைசார் அறிஞர்களால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் இந்தியாவில் ஏற்பட்ட பௌதிக மற்றும்  அரசியல் மாற்றங்களால் தமிழக மக்களில் குறிப்பிடத் தக்கோர் புங்குடுதீவு உட்பட்ட தீவுப்பகுதிகளில் வந்து குடியேறிய சந்தர்ப்பங்கள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பியாங்கு தீபம் காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாக தெரிவிக்கின்றனர். தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்பின் விளைவாக, அவர்களது கொடுமையின் காரணமாக தப்பி தமது கன்னிப் பெண்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட பூங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது எனக்கொள்வாரும்  உளர். ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் கொங்கடிவா (Congardiva) ஒல்லாந்தர் மிடில்பேக் (Middleburg) எனவும் பெயரிட்டு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவுக் கிராமத்தில் 1901ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் 5201 மக்கள் வாழ்ந்தனர் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு 14622 மக்களாக அதிகரித்த போதிலும் 1980களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக புங்குடுதீவிலிருந்து 1991ம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் மக்கள் வெளியேற்றத்தினால் 2012ம் ஆண்டு 4750 மக்களே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுக் காலத்திருந்து இத்தீவில் வாழ்ந்து வந்த மக்கள், வாழ்வியலில் விவசாயத்தை  முதன்மைப்படுத்தி தமது பொருளாதாரத் தேட்டத்தினை பெற்றுக்கொண்ட சமூக அமைப்பில் கல்விப்பாரம் பரியமும் மக்களோடு இணைந்து வளர்ந்து வந்ததை வரலாற்றுக் காலங்களிலிருந்து செவிவழிச் செய்திகளாக, ஆவணங்களாக எம்மூத்தோர் தொகுத்து அளித்துள்ளதை காணமுடிகின்றது. 

குறிப்பாக குருசீட பரம்பரையாக திண்ணைப்பள்ளிகள், நிலாப் பள்ளிகள், குருகுலப்பள்ளிகளை நிறுவி கல்வியில் ஆர்வம் உள்ளோரின் கல்விவளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளனர். உதாரணமாக ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்னர் சட்டம்பி சேதுகாவலர், பெருங்காடு புட்டினிக் குளத்தின் வடகரையில் திண்ணைப்பள்ளி நிறுவி கல்வி போதித்தார் என வரலாறு கூறுகின்றது. இவர்களைத்தவிர குமரகுரு சட்டம்பியார், பரமானந்த சட்டம்பியார், சி கணபதிப்பிள்ளை, நீ சேதுபதி, வைத்தியர் வே கணபதிப்பிள்ளை, நீ ஆறுமுகவாத்தியார், நாகமணியர், நா தில்லையம்பலவாத்தியார் போன்ற பலர் 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புங்குடுதீவுக் கிராமத்துக் கல்வியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர் எனலாம். 1830களைத் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியில் கத்தோலிக்க மற்றும் அமெரிக்க மிசனரிமார் மடத்துவெளி, சந்தையடி, பெருங்காடு, சின்ன இறுப்பிட்டி கிராமங்களில் முறைசார்ந்த கல்விக்கூடங்களை நிறுவினர். றிச்சட் கணபதிப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து பொன்னையா வாத்தியார், அமரசிங்க வாத்தியார் போன்றோர் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்பினை நல்கினர். 

இந்நிலையில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தற் பொருட்டு கல்வியியாளர்கள் பசுபதிப்பிள்ளை விதானையாருடன் சேர்ந்து சைவப் பாடசாலைகளை நிறுவ முயற்சி செய்து 1910ம் ஆண்டு புங்குடுதீவு கணேசவித்தியாசாலையினை ஆரம்பித்தார்கள்.  இதனைத் தொடர்ந்து படிப்படியாக இந்துப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 1940களில் ஒன்பதாக இருந்துள்ளது. இவை தவிர 1945ம் ஆண்டு மூன்று அரசபாடசாலைகளை அரசு ஆரம்பித்ததன் விளைவாக 1990ம் ஆண்டு புங்குடுதீவுக் கிராமத்தில் 15 பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. 1991ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் தற்போது எட்டுபாடசாலைகளே இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பௌதீக ரீதியாக பலம் குறைந்த புங்குடுதீவுக் கிராமத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மக்கள் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்துக் கொண்டு செல்லவே சகலரும் விவசாயத்தில் ஈடுபட்ட போது அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு உற்பத்திகள் போதுமானதாகவிருக்காத நிலையேற்படவே திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க யாழ்குடாநாட்டிற்கும், நாட்டின் ஏனையபகுதிகளுக்கும் தொழில்நிமித்தம் இடம்பெயரத் தொடங்கிய போதிலும் அவ்விடப்பெயர்வு தற்காலிக இடப்பெயர்வாகவே காணப்பட்டது. 

இவை தவிர இக்கிராம மக்கள் தமது பிள்ளைகளை கல்வியினூடாக வளம்முள்ளவர்கள் ஆக்கவும் முயற்ச்சி செய்யலாயினர். இதன் விளைவாக இக்கிராமத்தினைச் சேர்ந்த பலர் ஆசிரியர்களாகவும் அரச தொழில்களில் ஈடுபடுபவர்களுமாக உருவெடுத்தனர். குறிப்பாக மருத்துவம், பொறியியளாளர், கலை, விஞ்ஞானம், இயல், இசை, நாடகத்துறைகளில் கணிசமானவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்நிலையானது 1940களிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1960களைத் தொடர்ந்து புங்குடுதீவு மாணவர்களின் கல்வி மேன்மையுறலாயிற்று எனலாம். இவர்களின் கல்வி, கலாச்சார, பண்பாட்டு வளர்ச்சிக்கு இக்கிராமத்தில் வாழ்ந்த பலர் தமக்குரிய பங்களிப்பை நல்கி உள்ளனர். அவர்களின் கிராமத்து வாசம் கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகத்தினை உருவாக்குவதற்கு பெரிதும் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிகின்றது.

இவர்களில் புங்குடுதீவுக் கிராமத்தின் கல்விப்பாரம்பரியத்தில் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் பண்டிதர் முத்துக்குமாரு ஆறுமுகன் அவர்களாவர். இக்கிராமத்தின் கல்வி கேள்விகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களின் கல்வி, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராக திகழ்ந்தமையினால் உள்நாட்டிலும் தமிழகத்திலும் கல்விப் புலத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். தீவகத்தில் சமூக அடக்குமுறைக்கெதிராக குரல் கொடுத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கல்வியை வேண்டி நிற்போருக்கு தனது பட்டறிவைக் கொண்டு கல்விச்செல்வத்தை வழங்கியவர்.

இவ்வாறான பல்முகப்பார்வை கொண்டவராக வாழ்ந்த உயர்திரு பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இக்கிராமத்தின் முதுபெரும் சொத்தாக விளங்கியவர். படோபாகாரத்தை விரும்பாது தனது அறிவையும் ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு வாழ்நாள் முழுதும் வழங்கியவர். நாட்டில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலைகளினால் அவரால் வெளியிடப்பட்ட ஆய்வுகளை முழுமையாகப் பெற முடியவில்லை. குறிப்பாக அவரது சமகாலத்தவர்கள், மற்றும் மாணவர்களின் இழப்புக்கள், மற்றும் புலம்பெயர் இடப்பெயர்வின் விளைவாக அவரால் வெளியிடப்பட்டாய்வுகள் கிடைக்கப்பெறா விடினும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆய்வுகளும் முத்தமிழுக்கு ஆற்றிய அரிய தொண்டுகள் பற்றிய அரிய பல தகவல்களின் மூலமும் இவர் ஆழ்ந்த புலமை கொண்ட பண்டிதராக இக்கிராமத்தில் வலம் வந்துள்ளார் என்பதையிட்டு நாம் ஒவ்வொருவரும் புளகாங்கிதம் கொள்கிறோம்.

புங்குடுதீவு கிழக்கு முத்துடையார் பரம்பரையினரான முத்துக்குமாரு நாகம்மை தம்பதியினர் செய்த தவத்தின் பயனாக பிறந்த எட்டுக்குழந்தைகளில் பண்டிதர் ஆறுமுகம் 1914ம் ஆண்டு பிறந்தார். பல்கலை விற்பன்னரான முத்துக்குமாருவால் அவர் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியம், சமயம், இசை, சோதிடம், வைத்தியம், சித்திரம் போன்ற துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இளவயதிலேயே மாகாவித்துவான் கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றவர்களுடன் கல்வி தொடர்பான நட்பு கிடைக்கப் பெற்றது. சங்க இலக்கியங்களையும், இலக்கண நூல்களையுங்கற்று இத்துறையில் தனக்கெனவுரிய இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இதன் விளைவாக இவரது 15 வயதிலேயே சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆசிரியப்பணி வழங்கப்பட்டது. 18வது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி தான் கல்விகற்ற புங்குடுதீவு கணேசவித்தியாசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் இளமைத் துடிப்புடையவராக இருந்தமையால் தனது கிராமத்தில் சகலரும் கல்வியினூடக உயர்வடைய வேண்டும் என்று எண்ணி, பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக தனது வீட்டில் இரவு வேளைகளிலும் லீவு நாட்களிலும் திண்ணைப்பள்ளியினை நடாத்தி கிராமமக்கள் கல்வியில் நாட்டம் கொள்ளவைத்தார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் தனது கல்விப் பரப்பினை விரிவுபடுத்தும் முகமாக மதுரைத் தமிழ் சங்கத்தாருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து, புங்குடுதீவில் முதலாவது பண்டிதர் என்ற பெருமைக்கு உரியவரானார். தமிழ் இலக்கியத்தில் பெற்ற புலமையானது பண்டிதரை ஒரு பெரிய ஆய்வாளராக உருவாக்கியது. இவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் பல அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் வெளிவந்தமை பற்றி எமது கிராமத்தினைச் சேர்ந்த மறைந்த இலக்கிய கலாநிதி க சிவராமலிங்கபிள்ளை அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மேலும் இவர் தான் பெற்ற கல்வியையும் கௌரவத்தினையும் தனது கிராம இளைஞர்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் பலரை வித்துவான்களாக, பண்டிதர்களாக, இசைக்கலைஞர்களாக, சைவ சித்தாந்தவாதிகளாக, சமூகத் தொண்டர்களாக உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார்.

தந்தையாரின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியத்துறையில் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவம் கற்று, சிறப்புத் தேர்ச்சி பெற்று பகுதிநேர மருத்துவராக தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியத்தில் கொண்டிருந்த அளவற்ற காதலின் விளைவாக தமிழ் அறிஞர்களுடன் இணைந்து பல மகாநாடுகளை நடத்திய பெருமையும் பண்டிதருக்குரியதாகும். குறிப்பாக திருக்கேதீஸ்வரத்தில் சைவமகாநாடு, திருவாசகவிழா, மற்றும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களுடன் இணைந்து கொழும்பில் தமிழ் மறைக்கழகத்தினை நிறுவி திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா, கிளிநொச்சியில் 16வது திருக்குறள் மகாநாடு, புங்குடுதீவில் சிலப்பதிகார மகாநாடு போன்ற பல இலக்கிய மகாநாடுகளை நடாத்துவதற்கு பெரும்பங்கு கொண்டுழைத்து அம் மகாநாட்டு மலர்களின் ஆசிரியராக இருந்தும் அதில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியும் புங்குடுதீவுக்கு புகழ் சேர்த்த பெருமகனாவார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் சமூகரீதியாக ஒதுக்கப்பட்டமக்கள் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையை புங்குடுதீவுக் கிராமத்தில் முதன்முதலாக வெளிப்படுத்தி அதனைச் செயலிலும் செய்துகாட்டியவர். குறிப்பாக இவரது இளைமைக் காலத்தில் சாதி அமைப்பு முறை இறுக்கமாக கடைப்பிடிக்கப் பட்டதால் சமூகரீதியாக நலிவுற்ற மாணவர்கள் உயர் சாதி மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது. இதற்கெதிராக விழிபுணர்வினை ஏற்படுத்தியதுடன் ஏனைய தீவுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டவர். பின்னாட்களில்  எழுத்தாளர் மு தளையசிங்கம் சாதி வேறுபாட்டுக்கு எதிராக குரல்கொடுத்து வெற்றிபெற்ற போதும் அதில் தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் தனது கிராமத்தில் அளவற்ற அன்பு கொண்டவராக இருந்த நிலையில் தனது ஆசிரியப் பணியின் நிமித்தம் அதிக காலத்தினை வன்னியிலும் தென்னிலங்கையிலும் வாழவேண்டிய நிலை உருவானது. பின்னாட்களில் கிராமத்துடன் ஆன தொடர்புகள் சற்றுத் தளர்வுற்ற போதும் அவரது சொல்லும் செயலும் கிராமத்துக்கு உரமூட்டியவையாகவே இருந்துள்ளன.

பண்டிதர் அவர்கள் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரிதேவியுடனான திருமண வாழ்வில் தமிழரசி என்ற மகளை ஈன்று தான் எவ்வாறு கல்வி கேள்விகளில் பாண்டித்தியம் பெற்றாரோ அதே போல மகளையும் கல்விப் புலத்தினூடாக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். திருமதி தமிழரசி ஆளுமைமிக்க கல்வியாளராக, இலக்கியவாதியாக, கவிஞராக, கலை கலாசார விழுமியங்களில் தெளிந்தவராக பேச்சுத்திறனில் வல்லவராக, சாதி, சமய வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவராக, வரலாற்றைத் தெளிவுறக்கற்றவராக வளர்தாளாக்கிய பெருமை பண்டிதர் ஐயாவையே சாரும். உதாரணமாக திருமதி தமிழரசி அவர்கள் 1977ம் ஆண்டு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவில் ஆற்றிய உரை பற்றி எமது கிராமத்துப் பெண் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தந்தையார் தமது மகளுக்கு கல்வியையும் பேச்சாற்றலையும் சிறப்பாகவே கொடுத்துள்ளார் எனக்கூறி தந்தையையும் மகளையும் வாயாரப் புகழ்ந்ததை நேரில் கேட்கக் கூடியதாகவிருந்தது.

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் தொடர்பாக என்னால் எழுதப்பட்ட புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூலில் அவரது கல்விப்புலமை பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் பல கனதியான ஆய்வுகள் பல எழுதியுள்ளமை பற்றி பலரும் தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாய்வுகளில் பல எங்கோ மறைந்து கிடக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் அவரது ஆய்வுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் தமிழ்த்துறையைப் பெருமையடையச் செய்யலாம். தற்போது அவரது நூற்றாண்டு மலரில் என்னால் சேகரிக்கக் கூடிய தரவுகள், தகவல்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையை எழுதுவதற்குக் கிடைத்த வாய்ப்பினை பெருமையாக கொள்கிறேன்.

பண்டிதர் ஐயா அவர்களின் நாமம் எமது கிராமம் தொடர்பான கல்விப்பாரம்பரியத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது வெள்ளிடைமலை.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment